வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கூட்டமுண்டா எஸ்டேட் பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பிற்பகல் 2 மணியளவில் குறிச்சியாட் வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததை கண்டனர். மூன்றாவது புலியின் சிதைந்த உடல் எச்சங்கள் வைத்திரி வனப் பிரிவின் கீழ் உள்ள ஒரு காபி தோட்டத்தில் கிடந்ததை கண்டனர். மூன்று புலிகளின் உடல்களும் உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மூன்று புலிகளின் இறப்பு குறித்து ஒரு சிறப்புக் குழுவை அமைத்து முழுமையான விசாரணையை நடத்தி புலிகளின் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் உத்தரவிட்டார்.

