Last Updated:
மணமகனின் நடனம் தனது குடும்பத்தின் மதிப்பை கெடுக்கும் வகையில் இருந்ததாக கூறி, பெண்ணின் தந்தை திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
திருமண விழாக்களில் மணமக்கள் நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகின்றன. ஆனால், புது தில்லியில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகனின் நடனம் இரு குடும்பத்தினரிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் பாடலுக்கு மணமகன் ஆடிய ஆட்டம், மணப்பெண்ணின் தந்தையை கொதிப்படையச் செய்து திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றுள்ளது.
திருமண ஊர்வலத்துடன் மண்டபத்திற்கு வந்த மணமகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கு ஏற்ப, “சோலி கே பீச்சே க்யா ஹை” என்ற பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். இந்த பாடலுக்கு அவர் நடனமாடியது சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மணப்பெண்ணின் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நடனமாடிக்கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்திய அவர், மணமகனின் நடனம் தனது குடும்பத்தின் மதிப்பைக் கெடுக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து மணமகளின் தந்தையை மணமகன் சமாதானம் செய்ய முயற்சித்தும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
திருமணம் நின்றுபோனதால் மணப்பெண் கண்ணீருடன் நின்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வால், இரு குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
February 02, 2025 1:37 PM IST


