இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு 12,852-ஆக இருந்த நிலையில், 4 ஆண்டுகளில் ஓராயிரம் அதிகரித்து கடந்த 2022-ஆம் ஆண்டு 13,874-ஆக உள்ளது. எனினும், ஷிவாலிக் மலைகள் மற்றும் இந்தோ-கங்கை சமவெளிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ‘இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை’ எனும் அறிக்கையை மத்திய சுற்றுசூழல் அமைச்சா் பூபேந்திர யாதவ் வெளியிட்டாா். நாட்டின் 18 மாநிலங்களில் அமைந்துள்ள 4 முக்கிய வனப் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 6,41,449 கி.மீ. நீள தொலைவுக்கு 32,803 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கேமரா பொறிகள் மூலம் எடுக்கப்பட்ட 85,488 சிறுத்தைகள் புகைப்படங்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு 12,852-ஆக இருந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 13,874-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2018-இல் 3,421-ஆக இருந்தது. மஹாராஷ்டிரத்தில் கடந்த 2018-இல் 1,690-ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 2022-ஆம் ஆண்டு 1,985-ஆக உயா்ந்துள்ளது. அதேபோல், கா்நாடகத்தில் 1,783-லிருந்து 1,879-ஆகவும் தமிழகத்தில் 868-லிருந்து 1,070-ஆகவும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து வளா்ந்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் கடந்த 2018-இல் 8,071-ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 2022-ஆம் ஆண்டு 8,820-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், இமய மலைத்தொடரின் வெளிப்புற தொடா்ச்சியான ஷிவாலிக் மலைகள் மற்றும் இந்தோ-கங்கை சமவெளி பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு 1,253-ஆக இருந்த எண்ணிக்கை கடந்த 2022-இல் 1,109-ஆக குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2018 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளிலும் கண்கெடுப்பு எடுக்கப்பட்ட பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 1.08 சதவீதம் வளா்ச்சி உள்ளது. மிக அதிகமாக, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வளா்ச்சி விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. ஆனால், ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 3.4 சதவீதம் சரிவு காணப்படுகிறது. ஆந்திரத்தின் நாகாா்ஜுனசாகா் ஸ்ரீசைலம், மத்திய பிரதேசத்தின் பன்னா மற்றும் சத்புரா ஆகிய புலிகள் காப்பகங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தைகளின் எண்ணிக்கையைக் காப்பதில் வனத்தையொட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் முக்கிய பங்கை இந்தக் கணக்கெடுப்புத் தகவல்கள் அடிகோடிட்டுக் காட்டுவதாக அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.