நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார் 23 வயதான இளம் இடது-கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா. உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் வீரர். கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 2016 சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. அது தவிர நான்கு முறை பிளே ஆஃப் சற்றுக்கும் மற்றும் ஒரு முறை இரண்டாம் இடமும் பிடித்துள்ளது. கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ஆறு வீரர்களை வாங்கி இருந்தது அந்த அணி. அதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு வாங்கி இருந்தது. அதோடு டிராவிஸ் ஹெட் மற்றும் வனிந்து ஹசரங்காவைவும் வாங்கி இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனான கம்மின்ஸ் தான் அந்த அணியை வழிநடத்த உள்ளார். ஹைதராபாத் அணியுடன் முதல்முறையாக அவர் இணைந்துள்ளார். டேனியல் வெட்டோரி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். இப்படி இந்த சீசனை மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது ஹைதராபாத்.
அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ஹெட், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசன், மார்க்ரம், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமாத், அன்மோல்பிரீத் சிங், உபேந்திரா யாதவ் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்கா, மார்க்கோ யான்சன், ஷபாஸ் அகமது போன்றவர்கள் உள்ளனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், உனத்கட், நடராஜன், உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் பாரூக்கி, மயங்க் மார்கண்டே போன்றவர்கள் உள்ளனர்.
இந்த சீசனில் அந்த அணியின் ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்களை சேர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது. இதில் கேப்டன் என்ற முறையில் கம்மின்ஸ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்புள்ளது. அதே போல ஒற்றை நபராக ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறன் கொண்ட வீரராக இருக்கும் கிளாசன் ஆடுவது உறுதி. அது போக மீதமுள்ள இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களில் யாரை ஆடும் லெவனில் சேர்ப்பது என்ற சிக்கல் இருக்கும். ஹெட், மார்க்ரம் மற்றும் ஹசரங்கா, யான்ஸ்சென் என இந்த நான்கு வீரர்கள் இருவர் ஆடுவார்கள். அதே போல கிளென் பிலிப் மற்றும் பாரூக்கி ஆகியோரும் அணியில் உள்ளனர்.
அபிஷேக் சர்மா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2018 முதல் விளையாடி வருகிறார். டெல்லி அணியுடன் அவரது ஐபிஎல் பயணம் தொடங்கியது. 2019 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரையில் 42 இன்னிங்ஸ் ஆடி 830 ரன்கள் எடுத்துள்ளார். 9 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். 2022 சீசனில் 426 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி 226 ரன்கள் எடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் 10 இன்னிங்ஸ் ஆடி 485 ரன்கள் எடுத்திருந்தார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 192. அண்மையில் முடிந்த ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்திருந்தார்.
பந்தை தனது மட்டையால் க்ளீன் ஸ்ட்ரைக் செய்வது மற்றும் பயனுள்ள இடது-கை சுழற்பந்து வீச்சாளராக அணிக்கு உதவும் திறன் கொண்ட வீரர். அவரை இம்பேக்ட் பிளேயராக கூட அணியில் இடம்பெற செய்யலாம்.
அதேபோல ஹைதராபாத் அணி நிர்வாகம் மயங்க் அகர்வால், ஹெட் இணையருடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய விரும்பினால் அபிஷேக் சர்மா, பேட்டிங் ஆர்டரில் மூன்று அல்லது நான்காவது இடத்தில் பேட் செய்ய வேண்டி இருக்கும். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரின் ஃபார்மை அப்படியே இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக தொடர வாய்ப்புள்ளது.
முந்தையப் பகுதி: ரமன்தீப் சிங் – கொல்கத்தா அணியின் உள்ளூர் அசத்தல் ஆல்ரவுண்டர் | ஐபிஎல் 2024 வல்லவர்கள்