டெல்லி கேபிடல்ஸ் அணி இம்முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த 2022-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் உடற்தகுதியை அடைந்து சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்கு திரும்ப உள்ளார். அவரது வருகை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதுத்தெம்பை கொடுக்கக்கூடும்.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2020-ம் ஆண்டு அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட தவறியது. 10 அணிகள் கலந்து கொண்ட தொடரில் டெல்லி கேபிடல்ஸ் 9-வது இடத்தையே பிடித்தது.
இம்முறை டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பந்த்துடன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், அன்ரிச் நோர்க்கியா, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் போன்ற திறமையான வீரர்களும் உள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன், மேற்கு இந்தியத் தீவுகள் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் இணைந்துள்ளனர். உள்ளூர் திறமைசாலிகளாக குமார் குஷாக்ரா, சுமித் குமார், ரிக்கி புயி, ஸ்வஸ்திக் சிகாரா, ரசிக் தார் ஆகியோரும் உள்ளனர்.
விலகல்: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சொந்த காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரரை டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
புதிய வரவு: ஜே ரிச்சர்ட்சன், குமார் குஷாக்ரா, ரஷிக் சலாம், ரிக்கி புயி, ஷாய் ஹோப், சுமித் குமார், ஸ்வஸ்திக் சுரேந்தர் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.