குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத நிலையில் தான் கணக்கு வாக்குப்பதிவை முன்வைக்க முடியும்.அரச நிதி முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அந்த சட்டத்தின் ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தனக்கு பெரும்பான்மை உள்ளதால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (05) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அசோகா ரன்வல தலைமையில் கூடியது. அதன்போது எழுந்த தயாசிறி ஜயசேகர எம்.பி. சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்ற சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.
எனினும் நீங்கள் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை வியாழக்கிழமை (05) காலை 9.25 மணியளவில்தான் கிடைத்தது அத்துடன் அதில் திகதியும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் உங்களிடம் கலந்துரையாட இருந்தேன் என்றார்.
இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர எம்.பி., பாராளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அதாவது 9.30 மணிக்கு முன்னர் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கலாம் என்று கூறிவிட்டு
கணக்கு வாக்குப் பதிவை முன்வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத பட்சத்தில் தான் கணக்கு வாக்குப்பதிவை முன்வைக்க முடியும். அரச நிதி முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அந்த சட்டத்தின் ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கு எமக்கு இடமளித்து . உங்களின் குறைகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

