வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்க உள்ளது. அதற்கு முன், கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.
இதில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
மற்ற வேட்பாளர்கள் வெளியேறிய நிலையில், இருவரும் வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக தேர்வாவது உறுதியாகி உள்ளது.
ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2,099 பேரின் ஆதரவை ஜோ பைடன் பெற்றுள்ளார். இதையடுத்து, ஆகஸ்டில் சிகாகோவில் நடக்கும் கட்சியின் மாநாட்டில், ஜோ பைடன், 81, மீண்டும் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
அதுபோல, குடியரசு கட்சியில் 1,215 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1,228 பேரின் ஆதரவை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார்.
மில்வாகேவில் ஜூலையில் நடக்கும் கட்சி மாநாட்டில், டொனால்டு டிரம்ப், 77, வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
குடியரசு கட்சி சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட உள்ளார். கடந்த 2020ல் நடந்த தேர்தலில், ஜோ பைடன் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நேரடி மோதல் இருந்தது.
தற்போது இரண்டாவது முறையாக இருவரும் நேரடியாக மோத உள்ளனர்.
இதற்கு முன், 1956 தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிவைட் எய்சனோவர் மற்றும் ஜனநாயக கட்சியின் அட்லாய் ஸ்டீவன்சன் இரண்டாவது முறையாக எதிர்த்து போட்டியிட்டனர்.
இரண்டு முறையும் எய்சனோவர் வென்றார்.
அதற்கு பின், இரண்டு வேட்பாளர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரடியாக மோதுவது, இந்த தேர்தலில் நடக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்