அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கும்பல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை `கலிபோர்னியா கேர்ள்ஸ்’ என்ற ஆப்ரேஷன் மூலம் விசாரணையைத் தொடங்கியது. அப்போதுதான் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தவர் மிச்செல் மேக் (53). இவருக்குக்கீழ் சுமார் 12 பெண்கள் `கலிபோர்னியா கேர்ள்ஸ்’ என்ற கேங்கில் இருக்கின்றனர்.
இவர்களை இயக்கும் மிச்செல் மேக், கலிபோர்னியா கடற்கரை, டெக்ஸாஸ், புளோரிடா, மாசசூசெட்ஸ், ஓஹியோ உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அந்தப் பெண்களை அனுப்பி, Ulta Beauty, TJ Maxx, Walgreens போன்ற பிரபல கடைகளில் மேக்கப் பொருள்களைத் திருட வைத்திருக்கிறார். அந்தக் கடைகளுக்குச் செல்லும்போது என்ன மாதிரியான உடை, சிகை அலங்காரம், மேக்கப் அணிந்து செல்ல வேண்டும், எந்த மாதிரியான பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட A – Z திட்டங்களை வகுத்து கொடுத்துவிடுவார்.
மேலும், அந்தப் பெண்கள் செல்வதற்கான விமான டிக்கெட், கார், டாக்ஸி உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார். எனவே, மிச்செல் மேக்கின் திட்டப்படி அந்தப் பெண்கள் நூற்றுக்கணக்கான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். திருடிய பொருள்களை மிக்செல் மேக் அமேசான் மூலம் சலுகை விலையில் விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார்.

இது போன்ற திருட்டால் மட்டும், இதுவரை சுமார் 8 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, கடந்த வெள்ளிக்கிழமை மிச்செல் மேக், மற்றொரு பெண்ணின் வீடுகளில் சோதனையிட்டு 3,00,000 டாலர் மதிப்புள்ள மேக்கப் உள்ளிட்ட பிற பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறது. மேலும், மிக்செல் மேக்கைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது.