குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அதானி நிறுவனம் எரிசக்தி, ரியல் எஸ்டேட், விமான நிலைய சேவைகள், விவசாய வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவிலும் கிளைகளை பரப்பியுள்ள அதானி நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி உள்ளார்.
இந்த நிலையில் கவுதம் அதானி உள்பட 8 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அரசின் சோலார் எனர்ஜி நிறுவனம், சூரிய மின் சக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இதை அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெற்றன.
அதாவது 12 ஜிகாவாட்ஸ் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை குறிப்பிட்ட விலையில் மத்திய அரசின் சோலார் எனர்ஜி நிறுவனத்துக்கு விநியோகிக்க ஒப்பந்தம் பெற்றன. ஆனால், மத்திய அரசின் சோலார் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க எந்த மாநிலமும் முன்வரவில்லை. இங்குதான் அதானி குழுமம் ஒரு திட்டத்தை தீட்டியதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
265 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 2,200 கோடி ரூபாயை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தருவதற்கு அதானி குழுமம் முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் எஸ். அதானி, அதானியின் உறவினரான சாகர் எஸ். அதானி, வினித் எஸ். ஜெயின், ரஞ்சித் குப்தா உள்ளிட்டோர் இந்த திட்டத்தை தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
லஞ்சம் தொடர்பான பரிவர்த்தனை கடிதங்களில் கவுதம் அதானி பெயரை “SAG,” “Mr. A,” “Numero uno” மற்றும் “the big man” என சங்கேத வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல ஜெயின் பெயரை, “V,” “snake” மற்றும் “Numero uno minus one.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புரூக்ளின் நீதிமன்றத்தில், அமெரிக்க அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் அதானி உள்ளிட்டோர் மீது மூன்று வித குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது, அதானி உள்ளிட்டோர் லஞ்சம் கொடுக்க சதி செய்து ஆதாரங்களை அழித்ததோடு, அமெரிக்கா பங்கு வர்த்தக அமைப்பு மற்றும் அமெரிக்க காவல்துறைக்கு தவறான தகவல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அதானி குழுமம் அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி, கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது, அமெரிக்க வெளிநாட்டு பரிவரித்தனை மீறல் சட்டத்தின் கீழ் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை நீக்கி, அமெரிக்க பங்கு வர்த்தக அமைப்பின் விசாரணையை தடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் :
இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட் – அதிரடி காட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
இந்த வழக்கில் கவுதம் அதானி, சாகர் எஸ். அதானி, வினித் எஸ். ஜெயின், ரஞ்சித் குப்தா, சிரில் கேபினியஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா, ரூபேஷ் அகர்வால் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அதை அமெரிக்க வெளிநாட்டு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதானி குழுமம், “குற்றம் நிரூபணம் ஆகும் வரை தாங்கள் நிரபராதிகள் என்று அமெரிக்கா நீதித்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
வெளிப்படைத்தன்மையுடன், விதிகளை எப்போதும் பின்பற்றி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குசந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 23 விழுக்காடு வரை சரிந்துள்ளன. இதில், அதிகபட்சமாக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அதானி பசுமை ஆற்றல் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் சரிந்தது. இதேபோன்று, அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 14 விழுக்காடு, அதானி துறைமுகத்தின் பங்குகள் 8 விழுக்காடு சரிவுடன் வணிகம் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் குறைந்துள்ள நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.க்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, அதானி குழும முறைகேடு புகார் எதிரொலியால், அவர்களுக்கு கடன் கொடுத்துள்ள எஸ்.பி.ஐ. உட்பட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.
அதிகபட்சமாக பேங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் 7 விழுக்காடும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 6 சதவிகிதமும் சரிந்துள்ளன. இதேபோன்று, கனரா மற்றும் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் தலா 5 சதவிகிதம் சரிவடைந்துள்ளன. மேலும், இன்டஸ்இன்ட் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கிகளின் பங்குகளும் தலா 3 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளன.
இதையும் படியுங்கள் :
133 பணியிடங்களுக்கு குவிந்த பல்லாயிரம் பேர்! என்ன நடந்தது உத்தரகாண்டில்?
இந்நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)