[ad_1]
உத்தமபாளையம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அரசு கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபரில் முதல் போக சாகுபடி முடிந்தநிலையில், இரண்டாம் போகத்துக்கான பணிகள் தொடங்கின. இதற்காக நாற்று பாவி, வயல்களில் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். தற்போது இந்த பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து உத்தம பாளையம், சின்னமனூர், குச்சனூர், காமயகவுண்டன்பட்டி, மார்க்கையன்கோட்டை, கோட்டூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உத்தமபாளையம் விவசாயி முருகன் கூறுகையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை யால் இயந்திரங்கள் மூலமே அறுவடை நடைபெறுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ரூ.3 ஆயிரம் வரை வாடகை கொடுக்கிறோம். அறுவடை முழு வதும் முடிந்த பிறகுதான், மகசூல் விவரம் தெரியவரும். அரசு கொள்முதல் நிலையத்தை இன்னமும் திறக்கவில்லை. ஆகவே வியாபாரிகளுக்கே விற்க வேண்டிய நிலை உள்ளது. அறுவடைக்குப் பிறகு பயறு வகைகளை பயிரிடுவோம் என்று கூறினார்.
இருப்பினும் வீரபாண்டி, வயல்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் அடுத்த மாதத்தில் அறுவடை செய்யும் அளவுக்கே நெற் கதிரின் வளர்ச்சி உள்ளது. எனவே அதற்குள் நெல் கொள்முதல்நிலையத்தை அரசு தொடங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.