டெல்லியில் பண்டிகை காலங்களில் மட்டுமன்றி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு தடை என்பது வெறும் கண்துடைப்பு என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டதை குறிப்பிட்டு கண்டனமும் தெரிவித்தனர்.
தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் தடை விதித்தால் போதாது என்றும், திருமணம், தேர்தல் நேரங்களிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்க கூடாது என வினவினர்.
அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை உள்ள நிலையில், ஆண்டு முழுவதும் தடை விதிப்பது பற்றி ஆலோசிக்குமாறு டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வரும் 25 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம், பட்டாசு மட்டுமல்லாது பட்டாசு தயாரிக்கும் மூல பொருளுக்கும் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. டெல்லியில் பட்டாசு விற்பனை உரிமத்தை முழுமையாக ரத்து செய்யவும் முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
