19
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டின் இடைக்கால அரசு நாடவுள்ளது.
பங்களாதேசத்தின் அரச தொழில்களில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறைகளால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதனால் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த ஒகஸ்ட் 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
மேற்கு நாடுகளுக்கு செல்வதற்கு அந்நாடுகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்ததால், அவர் தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க அவரை பங்களாதேசத்துக்கு அழைத்துவர அந்நாட்டு இடைக்கால அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு சட்ட விவகார பிரிவு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ரூல் கூறுகையில், ‘ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போல் மூலம் விரைவில் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். இங்கிருந்து தப்பியோடியவர்கள் உலகில் எங்கு பதுங்கியிருந்தாலும், அவர்கள் மீண்டும் வங்கதேசத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றுள்ளார்.

