வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பதவி காலம் நிறைவடையும் முன்பே தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று( மார்ச் 09) திடீரென ராஜினமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையத்தில் 3 பேர் ஆணையர்களாக இருப்பார்கள். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையராக அருண் கோயல் உள்ளார். மற்றொரு பதவி காலியாக உள்ளது.
அருண் கோயல் நியமனம்
கடந்த ஆண்டு மே மாதம், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா ஓய்வு பெற்றதால், கனரக தொழிற்சாலை துறை செயலராக இருந்த அருண் கோயல், தேர்தல் ஆணையராக கடந்த 2022ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.இவரது பதவி காலம் 2027 வரை உள்ளது.
2025ல் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பதவி காலம் நிறைவடையும் முன்பே தனது பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை நேரடியாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் மூவர் கொண்ட குழுவில் தற்போது ராஜிவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். அருண் கோயல் ஆணையராக நியமிக்கப்பட்ட போதே சரச்சை எழுந்தது.
காரணம் என்ன?
இந்நிலையில், அருண் கோயல் ராஜினாமா தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: அருண் கோயல் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தேர்தல் ஆணையத்தில் தான் பிரச்னை. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் – அருண் கோயல் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தேர்தல் தொடர்பான கோப்புகளில் இருவர் இடையே ஒரு மித்த கருத்துகள் இல்லை. இன்னொரு தேர்தல் ஆணையர் பதவியும் காலியாக உள்ளதால், பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் திணறியது.
மாநில வாரியாக, அரசியல் கட்சிகளுடன் நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களின் போதும், இருவருக்குமான கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதனால் தான் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிப்பது தாமதமாகலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement