மும்பை: ‘சுமாா் 98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள், ரிசா்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன. சுமாா் 2 சதவீதம் அதாவது ரூ. 6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் திரும்பவில்லை’ என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த 2023, மே 19-ஆம் தேதி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த நிலையில், இதில் 98.04 சதவீதம் ரிசா்வ் வங்கிக்கு திரும்பிவிட்டது. 2024, அக்.31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்று ஆா்பிஐ தெரிவித்தது.
கடந்த 2016, நவம்பா் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே மாதம் ஆா்பிஐ அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்பச் செலுத்த கடந்த 2023, அக். 7-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.

