பல தசாப்தங்களாக கம்யூனிச ஆட்சியின் கீழ், வானளவு உயர்ந்த சீனாவின் பொருளாதாரம், அண்மைக் காலங்களில் பாதாளத்துக்கு செல்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. குறைந்த பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட் பிரச்னை, அதிகரிக்கும் அரசாங்க கடன், வேலையின்மை, மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
சீனாவின் துவண்டுகொண்டிருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது சீன அரசு. 2019-ல் சீனா கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழாவின்போது, சீனா விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் பொருளாதார நாடாக மாறும் என்று நிபுணர்கள் ஆருடம் கூறினர். ஆனால், அதற்கான சமிஞ்கைகள் எதுவும் தென்படுவதுபோல தெரியவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பொருளாதார சிக்கலை சரிசெய்யும் நோக்கில் ஏராளமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் அதிபர் ஜி ஜின்பிங். இந்த கவலை தரும் சூழலுக்கு மத்தியில் சீன மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை இரண்டு விதமான ஆய்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
முதலாவது, சீன மக்கள் தங்களுடைய எதிர்கால வளர்ச்சி குறித்து மிகுந்த அவநம்பிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் போராட்டங்கள் ஆன்லைனிலும், சாலைகளிலும் அதிகரித்துள்ளன.
கொரோனாவுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் அமல்படுத்தப்பட்ட மூன்று மிகப் பெரிய ஊரடங்குகள் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளை முற்றிலுமாக முடக்கிப் போட்டது. எதிர்காலம் குறித்த சீன மக்களின் மனநிலையை பற்றிய ஆய்வு 2004 முதல் 2009 மற்றும் 2014 முதல் 2023 வரை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

