வங்கதேசத்தில் பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த போராட்டங்கள் தற்போது அடுத்தடுத்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடுதான். அதாவது, 1971ஆம் ஆண்டு வங்கதேசம் தனி நாடாக பிரிந்ததற்கான சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு 30 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கே பெரும்பாலான உரிமை போய்விடும் என்று கூறி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சுதந்திர போராட்ட வீரர்களின் தலைமுறையில் இரண்டாவது, மூன்றாவது வாரிசுகளே வந்துவிட்ட நிலையில், இன்னும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது ஏற்புடையதல்ல என்றும், இந்த இட ஒதுக்கீட்டை பலரும் முறைகேடான வழிகளில் பயன்படுத்தி வருவதாகவும் மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், மாணவர்கள் போராட்டத்தை தீவிரப் படுத்தினர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்த நிலையில், ஒரு சில இடங்களில் அது வன்முறையாக வெடித்தது. இதனால், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மாணவர்கள் நடத்திய தாக்குதல் போன்றவற்றால் பல இடங்களில் மரண ஓலங்கள் கேட்கத் தொடங்கின. வன்முறையால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அரசுப் பணிகள் முடங்கியதோடு, பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்தது.
இதனிடையே, பிரதமரின் இல்லம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதையடுத்து, மாணவர்களின் போராட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து, அங்கு உடனடியாக ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக போராட்டம் முடிவுக்கு வராவிட்டால், ராணுவம் களமிறங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க:
37,510 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா எச்சரிக்கை!
இதனிடையே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான பிரதமர் ஷேக் ஹசீனா லண்டன் தப்பிச் சென்றுவிட்டதாகவும், இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், போராட்டக்களமாக இருக்கும் வங்கதேசத்திற்கு தற்போது இந்தியர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகத்தை +8801958383679 +8801958383680 +8801937400591 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
.