ஐஐடி அல்லது ஐஐஎம் போன்ற சிறந்த கல்லூரிகளில் படிப்பவர்கள் தான் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி, அதில் வெற்றியும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இங்கு பொதுவாக காணப்படுகிறது. ஆனால் இதுபோன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் படிக்காவிட்டாலும் கூட, பல தொழில்முனைவோர்கள் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் பிற நிறுவனங்களில் வேலை செய்யத் தொடங்கி, அதன் மூலம் அனுபவத்தைப் பெற்று இறுதியில் சொந்தமாக தங்கள் நிறுவனங்களைத் தொடங்கியவர்களாக இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் வருண் துவா. ACKO ஜெனரல் இன்சூரன்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், கடந்த எட்டு வருடமாக இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இதையும் படிக்க:
சிலிண்டர் விலை முதல் ஃபாஸ்டேக் விதிமுறை வரை… ஆக.1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!
2016-ம் ஆண்டு வருன் தொடங்கிய இந்நிறுவனம் தான் இந்தியாவின் முதல் டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். இது காப்பீட்டுத் தயாரிப்புகளை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் செயல்முறையைப் பின்பற்றி வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவர்களது வெற்றிக்கு இதுவே முக்கிய காரணமாகும். சமீபத்தில் டிஜிட்டல் க்ரோனிக் கேர் மேனேஜ்மென்ட் நிறுவனமான OneCare-யை வாங்கியுள்ளது Acko நிறுவனம். அக்கோவின் செயல்பாடுகள் மூலம் வருவாய் 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ம் நிதியாண்டில் ரூ.1,334 கோடியிலிருந்த வருவாய், 2023-ம் நிதியாண்டில் ரூ.1,759 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் இழப்புகள் 53.1 சதவீதம் அதிகரித்து ரூ.738 கோடியாக உள்ளது.
வருண் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிதித்துறையில் பணியாற்றியுள்ளார். டாடா குழுமத்தின் டாடா ஏஐஜி லைஃப் இன்சூரன்ஸ் (AIG Life Insurance) நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக நான்கு ஆண்டுகள் (2003 – 2007) பணியாற்றி இருக்கிறார். Acko-வை நிறுவுவதற்கு முன்பு, கவர்ஃபாக்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி நவம்பர் 2010-ல் GlitterBug என்ற டெக்னாலஜிஸ் நிறுவனத்தையும் நண்பரோடு இணைந்து தொடங்கியுள்ளார் வருன். இவர் மும்பை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். வருண் MICA – The School of Ideas என்ற கல்வி நிலையத்திலும் படிப்பை முடித்துள்ளார்.
ஜெனரல் அட்லாண்டிக், ஆக்செல், எலிவேஷன் கேபிடல், எஃப்பிஜிஏ ஃபேமிலி ஃபவுண்டேஷன் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து இன்றுவரை சுமார் 450-460 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருனுடைய நிறுவனம் திரட்டியுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இரண்டு ஆண்டுகளுக்குள், ஸ்விக்கி, ரேஸர்பே மற்றும் க்ரெட் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உட்பட 8 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு செய்துள்ளதாக அக்கோ (Acko) நிறுவனம் கூறுகிறது.
.