புதுடெல்லி: திமுக எம்.பி. ஆ.ராசா மதுரை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 4-ம் தேதி பேசுகையில், ‘‘இந்தியா ஒரு நாடு அல்ல. துணைக் கண்டம். இங்கு தமிழகம் ஒரு நாடு, கேரளா ஒரு நாடு, ஒடிசா ஒரு நாடு. இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்ததுதான் இந்தியா என்ற துணைக் கண்டம்’’ என்றார். மேலும் ராமாயணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் ராமரின் எதிரிகள்’’ என்றார்.
இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரிய ஸ்ரீனேட், ‘‘ ஆ.ராசாவின் கருத்தை 100 சதவீதம் நிராகரிக்கிறோம். இந்த கருத்துக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
ராமர் அனைத்து சமுதாயத்தினருக்கும் சொந்தமானவர் என நான் நம்புகிறேன். ராமர் வாழ்வின் லட்சியம், ராமர் என்றால் அறம், கண்ணியம், அன்பு ஆகியவற்றை கொண்டவர். ராசாவின் கருத்தை முற்றிலும் கண்டிக்கிறேன். நாம் பேசும்போது நிதானத்துடன் பேச வேண்டும்’’ என்றார்.
சிவசேனா (உத்தவ் அணி) செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், ‘‘ஆ.ராசாவின் கருத்துக்கு இண்டியா கூட்டணி கண்டனம் தெரிவிக்கிறது. ஆ.ராசாவுக்கு ராமர், அம்பேத்கர், அரசியல் சாசனம், நாட்டின் ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லை. அவருக்கு எதில்தான் நம்பிக்கை உள்ளது. இது போன்ற நபர்களை மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.