ராம்நகர் : வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்த விவகாரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு நடந்ததாகக் கூறி, எஸ்.ஐ.,யின், ‘சஸ்பெண்ட்’ உத்தரவை வாபஸ் செய்து, ஐ.ஜி., உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசம், ஞானவாபி மசூதியில், ஹிந்துக்கள் வழிபாடு நடத்த கடந்த ஜனவரி 31ல் வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம்நகர் ஐசூரை சேர்ந்த, வக்கீல் சந்த் பாஷா என்பவர், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹிந்து அமைப்பினர், ராம்நகர் மாவட்ட வக்கீல் சங்கத்தில் புகார் அளித்தனர்.
அப்போது அங்கு சென்ற சந்த் பாஷாவின் ஆதரவாளர்கள், ‘சந்த் பாஷா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கூறினர். அப்போது அவர்களுக்கும், வக்கீல்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், தன் ஆதரவாளர்களை தாக்கியதாக 40 வக்கீல்கள் மீது, ஐசூர் போலீசில், சந்த் பாஷா புகார் செய்தார்.
அதன்படி வக்கீல்கள் மீது, எஸ்.ஐ., தன்வீர் ஹுசைன் வழக்குப் பதிவு செய்தார்.
இதை கண்டித்து வக்கீல்கள் இரவு, பகலாக போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னை கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
ஒரு சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக, எஸ்.ஐ., தன்வீர் ஹுசைன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிரச்னையின் தீவிரத்தால், எஸ்.ஐ., தன்வீர் ஹுசைனை சஸ்பெண்ட் செய்து, கர்நாடக அரசு உத்தரவிட்டது.
அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. விசாரணை அறிக்கையில், எஸ்.ஐ., மீது எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்றும், சட்டத்திற்கு உட்பட்டு அவர் நடந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதனால், அவரது சஸ்பெண்ட் உத்தரவை, மத்திய மண்டல ஐ.ஜி., ரவிகாந்தேகவுடா வாபஸ் பெற்றுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்