இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை டிரஸ்ஸிங் ரூமில் இந்திய அணி கொண்டாடிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
ஒருக்கட்டத்தில், தோல்விக்கு அருகே சென்ற இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வந்து பிறகு வெற்றிப் பெற்றது. இந்திய ரசிகர்கள் கூட இந்தியா ஜெயிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
லார்ட்ஸில், கடந்த ஆக.12ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர்.
பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் உதவியுடன் 391 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அந்த அணி 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர்.
பிறகு நேற்று (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி – பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா விரைவில் ஆல் அவுட் ஆகி, இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்று இந்திய ரசிகர்களே நினைத்துக் கொண்டிருந்த போது, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர்.
அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 – 0 முன்னிலை பெற்றது இந்திய அணி.
ஷமி – பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை கட்டம் கட்டியது தான். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்கையில், பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசினார்.
அப்போது, ஆண்டர்சனுக்கும் பும்ராவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தொடர் பவுன்சர்களால் ரொம்பவே டென்ஷனான ஆண்டர்சன், அங்கேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு, பும்ரா களமிறங்கிய போது, வார்த்தைகளாலும் பவுன்சர்களாலும் வம்பிழுத்தனர். நேற்று 5வது நாள் ஆட்டம் தொடங்கிய போது, பண்ட், இஷாந்த் இருவரும் ஓலே ராபின்சன் ஓவரில் அடுத்தடுத்து வெளியேறிய பிறகு களமிறங்கிய பும்ராவுக்கு மார்க் வுட், ராபின்சன் கூட்டணி கடுமையான பவுன்ஸ் பந்துகளை போட்டு அச்சுறுத்தியது.
விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மற்றும் மார்க் வுட் தன் பங்குக்கு பும்ராவை வார்த்தைகளால் வம்பிழுக்க, பொறுமையிழந்த பும்ரா, பதிலுக்கு பதில் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அதற்கு அடுத்த ஓவரில், மார்க் வுட் மிக வேகமான பவுன்ஸ் பந்து ஒன்றை வீச, அந்த பும்ரா ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இதனால் ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார் பும்ரா.
இந்த சம்பவத்துக்கு பிறகு ஆட்டம் அப்படியே திசை மாறியது. பும்ராவும் – ஷமியும் மிக நேர்த்தியாக விளையாடினார்கள். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் போக்கையே இந்த மோதல் மாற்றியது.
இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி தங்களது ஓய்வு அறையில் கொண்டாடியதை பிசிசிஐ வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய அணியின் வெற்றி குறித்து வீரர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுப்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
வெற்றிக்குப் பிறகு கோலி அளித்த பேட்டியில், “நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நாங்கள் வெளிநாடுகளில் சில அற்புதமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம், நாங்கள் காட்டிய நம்பிக்கை மற்றும் கேரக்டர் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்தது.
எங்கள் அணியின் அடையாளம்” என்று பெருமை பொங்க கூறினார். 4 வது நாளில் 61 ரன்கள் அடித்த அஜிங்கியா ரஹானே கூறுகையில், “நாங்கள் விளையாடிய விதம் மற்றும் திரும்பி வந்த விதம், குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் வந்த விதம், உண்மையில் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.
ரோஹித் ஷர்மா கூறுகையில், “ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் அல்ல.. ஆட்டத்தின் பதினொரு பேரும் வெவ்வேறு நிலைகளில் ஒன்றாக இணைந்து, கையை உயர்த்தி பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.” என்றார். ஆட்டநாயகன் கே.எல்.ராகுல் கூறுகையில், “இங்கிலாந்துக்கு வந்து டெஸ்ட் போட்டிகளை வெல்வது சூப்பர், சூப்பர் ஸ்பெஷல். இந்த வெற்றிக்கான காரணம் அணியில் உள்ள அனைவருக்கும் செல்கிறது” என்றார். “இந்தத் தொடரில் நாங்கள் 1-0 முன்னிலையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்த நம்பிக்கையை அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் எடுத்துச் சென்று சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று ஷமி கூறினார். “இங்கு விளையாடி சிறப்பாக செயல்பட்டு என் நாட்டிற்காக வென்றது எனக்கு மிகப்பெரிய சாதனை” என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.