இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் பாதணிய பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட மீரிகம பிரதேசத்தில் நேற்று (04) இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் பலத்த காயத்திற்குள்ளாகி தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தலாவ – அனுராதபுரம் பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் அனுராதபுரம் – கல்கமுவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயத்திற்குள்ளானவர்களை தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குறித்த பெண் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
இவ்வாறு உயிரிழந்தவர் கல்கமுவ கிரிபாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
பலத்த காயத்திற்குள்ளான ஏனைய மூவரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்