தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது;
இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடையவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை அறிவித்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக் கூடும் எனவும் இது, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே நாளை மாலையில் நகரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (a)

