காலி மாவட்டத்திலுள்ள ஒரு நகரில், ஜேர்மனிய சுற்றுலாப் பயணியிடம் அதிகப் பணம் பெற்றுக்கொடுக்க முயன்ற உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், இறுதியில் தனது வேலையையே இழந்த சுவாரசியமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த இந்தச் சுற்றுலாப் பயணி, இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு முறையும் குறித்த உள்ளூர் வழிகாட்டியுடன் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர்களுக்கிடையிலான தொடர்பு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ளது. இதனால், இலங்கையில் தனது செலவுகளுக்கான பணத்தைக்கூட அந்த வழிகாட்டியிடமே அவர் வழங்கி வந்துள்ளார்.
சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த ஜேர்மனியர், தங்குமிடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள் உள்ளிட்ட மக்களுக்குப் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வந்தார். அவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் வழிகாட்டியே மேற்கொண்டு வந்துள்ளார்.
இம்முறை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் பயிற்சிப் புத்தகங்களையும் வழங்கும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைப் புகைப்படம் எடுப்பதற்காக, வழிகாட்டி ஒருவரைப் புகைப்படக் கலைஞரையும் அழைத்திருந்தார். இதற்காகப் புகைப்படக் கலைஞருக்கு ஒரு தொகை பணம் வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், வழிகாட்டி வேறொரு தேவைக்காக வெளியே சென்றிருந்தார். நீண்ட நேரமாகக் காத்திருந்த புகைப்படக் கலைஞரின் நிலையைப் பார்த்த ஜேர்மனியர், வழக்கத்திற்கு மாறாக அவரிடம் நேரடியாகச் சென்று, புகைப்படப் பணிக்காக எவ்வளவு பணம் பேசப்பட்டது எனக் கேட்டறிந்தார்.
வழிகாட்டி உறுதியளித்த தொகையைக் கேட்டதும் ஜேர்மனியர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வழிகாட்டி தன்னிடம் கேட்டிருந்த தொகையில் பாதியை மட்டுமே புகைப்படக் கலைஞருக்கு வழங்கினார். அதேவேளை, தன்னை நீண்டகாலமாக நம்பவைத்திருந்த வழிகாட்டியுடனான சேவையையும் அத்துடன் முடித்துக்கொண்டார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நம்பிக்கை, ஒரு தொகைப் பணத்தால் முடிவுக்கு வந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.


