Last Updated:
ராக்கெட் வேகத்தில் ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 11 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியுசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் 3 ஆவது மேட்ச் இன்று வெலிங்டனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டிம் சைபர்ட், பின் ஆலன் களம் இறங்கினர்.
டிம் 2 ரன்னில் ஆட்டமிழக்க பின் ஆலன் 5 சிக்சர்களுடன் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிட்செல் 89 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 17 ரன்களும் பெவோன் ஜேக்கப்ஸ் 39 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் தலா 4 பவுண்டரி சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 18 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களும் எடுத்தனர்.
மறுமுனையில் ராக்கெட் வேகத்தில் ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 11 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியிலும் வென்றதால் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


