Last Updated:
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்து, கிலோ ரூ.168க்கு விற்பனையாவதால் சாமானிய மக்களும், இல்லத்தரசிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்ட சமையலில் மிக முக்கிய இடம் பிடிப்பது சின்ன வெங்காயம். இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயத்தின் வரத்து கடந்த சில தினங்களாகக் கடுமையாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, அதன் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. வெங்காயம் விளையும் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து கணிசமாகக் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகை அடுத்த 15 நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் பலகாரங்கள் செய்ய சின்ன வெங்காயத்தின் தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் உள்ளதால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டு வந்த சின்ன வெங்காயம், வரத்து குறைந்ததால் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்து ரூ.150-க்கு விற்பனையானது. இந்த சூழலில், விலை மேலும் அதிகரித்து தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168 என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல், கடந்த காலங்களில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட பல்லாரி வெங்காயத்தின் விலையும் தற்போது ரூ.80 வரை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வெளிச்சந்தைகள் மற்றும் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கிலோ ரூ.168 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், உழவர் சந்தைகளில் கிலோ ரூ.140 முதல் ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையிலும் விலை சற்று அதிகமாகவே இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் அன்றாட சமையல் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அத்தியாவசியத் தேவையான சின்ன வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மழை குறைந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டிற்கு புதிய வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

