நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
அதன்படி, கடந்த வாரம் ரூ. 350 முதல் ரூ.400 வரை இருந்த ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை, தற்போது ரூ. 600 முதல் ரூ.650 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ குடைமிளகாயின் விலை ரூ. 250இலிருந்து ரூ. 400 முதல் ரூ. 450 வரையிலும், ஒரு கிலோ முட்டைக்கோஸின் மொத்த விலை ரூ. 150-லிருந்து ரூ. 350 வரையிலும் உயர்ந்துள்ளது.
மேலும் விலை அதிகரிக்கும்
மன்னிங் மார்க்கெட் பொது வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் அமைப்பாளரான அனில் இந்திரஜித் இதுதொடர்பில் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். “பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும்.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை ஆகும். தக்காளியின் மொத்த விற்பனை விலை சுமார் 600 ரூபாய் வரை எட்டுகிறது.
இதேபோல், பீன்ஸ் 400 முதல் 500 ரூபாய் வரையிலும், கெரட் 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லீக்ஸ் 200 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பை எதிர்பார்க்க இயலாது
தாழ்நிலக் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ புடலங்காய் 200 முதல் 250 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கெக்கரிக்காய் போன்ற காய்கறிகள் மட்டுமே 100 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கின்றன, கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது விலைகள் உயர்ந்துள்ளன.
எப்படியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில், காய்கறி விலைகள் அதிகரிக்கும். எனவே, எதிர்காலத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது. உண்மையில், விலைகள் மேலும் உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்களுக்கு நட்டம்
இதற்கிடையில், அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்முதல் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 30 முதல் 32 ரூபாய் வரை இருக்கும் நிலையில், தற்போது பண்ணைகளிலிருந்து முட்டைகள் அதே விலையில் விநியோகிக்கப்படுவதால், உற்பத்தியாளர்கள் எந்த இலாபமும் ஈட்ட முடியாமல் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாக கோழி இறைச்சி நுகர்வும் குறைந்திருந்தாலும், பண்டிகைக் காலத்தில் சந்தைக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சியை பற்றாக்குறையின்றி தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அஜித் குணசேகர உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

