இராகவன் கருப்பையா – மலேசியத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.ராஜன்(வயது 68) இன்று காலமானார்.
உடல் நலக் குறைவால் சிறிது காலம் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4 மணியளவில் மரணமடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்தனர்.
1970களில் தொழிலதிபர் ஆறுமுகம்பிள்ளை தோற்றுவித்த அப்போதைய தமிழ் மலர் தினசரி பத்திரிகையில் ஒரு இளம் நிருபராக தமது ஊடகத்துறை பயணத்தைத் தொடக்கிய ராஜன், ஏறத்தாழ 50 ஆண்டுகளாக சிறந்ததொரு பத்திரிகையாளராக வலம் வந்தார்.
ஆகக் கடைசியாக மக்கள் ஒசை தினசரியில் ஒரு இணை ஆசிரியராக பொறுப்பு வகித்த அவர், அப்பத்திரிகையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘சுடும் உண்மைகள்’ எனும் தலைப்பில் மிகத் துணிச்சலாக அவர் படைத்து வந்த சமூக, அரசியல் அலசல் கட்டுரைகள், வாசகர்களிடையே விமர்சன கண்ணோட்டத்தை உருவாக்கியதோடு நல்ல ஆதரவைப் பெற்று தொடரான அதிர்வலைகளையும் ஏற்படுத்தின எனலாம்.
தமது பத்திரிகைத்துறை பயணத்தில் விருதுகளைப் பெற்றுள்ள ராஜனின் மறைவு மலேசியத் தமிழ் ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும். அவர் பெற்ற விருதுகளில், -Bintang Kebaktian Masyarakat (BKM) by Sultan Kedah; Nambikkai Star Ikon Awards; Honorary Doctorate in media and journalism by stonewall international university; ABJ VIP GLOBAL 2024 (Best Editor Award); Sangapooshan by Malaysia Hindu Sangam; MIBA Awards for best chief editor ; Arinyar Anna 100-aandu vizha (Anna Viruthu) by Tamil Paathugaapu Iyakkam Malaysia ஆகியவையும் அடங்கும்.
இறுதிச் சடங்குகள் எண் 6, ஜாலான் SU2, தாமான் செலாயாங் உத்தாமா, 68100 பத்து கேவ்ஸ், சிலாங்கூர், எனும் முகவரியில் நாளை திங்கட்கிழமை 26/10/26 அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரையில் நடைபெறும். அதன் பிறகு தலைநகர் செந்தூலில் அவருடைய உடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு ‘மலேசியா இன்று’வின் நிர்வாகத்தினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
