Last Updated:
இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 40/5 என்ற நிலையில் இருந்து 174 ரன்களைத் துரத்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், தொடக்கக் திணறலிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 181 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், இளம் வீரர்களின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தால் வரலாற்றுச் சாதனைப் படைத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணிக்குச் பெரும் சோதனையாக விளங்கினார். சஞ்சு சாம்சன் (14), வைபவ் சூர்யவன்ஷி (4), அபிஷேக் சர்மா (27), ஸ்ரேயாஸ் ஐயர் (7) மற்றும் அக்சர் படேல் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி வெறும் 70 ரன்களுக்குள் தனது 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாகத் திணறியது.
சாண்ட்னர் மட்டும் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.
இந்தச் சூழலில் களமிறங்கிய நமன் திர், தனது பங்கிற்கு 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை மீட்டார். இருப்பினும், அவரும் 15ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அணியை மீட்கும் முழுப் பொறுப்பும் திலக் வர்மாவின் தோள்களில் விழுந்தது. அந்தச் சவாலைச் சிறப்பாக எதிர்கொண்ட திலக் வர்மா, பொறுப்புடன் ஆடி ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 51 ரன்களைக் குவித்தார் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்). மறுமுனையில் அவருக்குச் சிறந்த உறுதுணையாக நின்ற நிதிஷ் குமார் ரெட்டி, வெறும் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார் (1 பவுண்டரி, 1 சிக்சர்).
இந்த ஜோடி மிகக் குறைந்த பந்துகளில் (30 பந்துகளில் 69 ரன்கள்) ஆட்டத்தையே மாற்றி அமைத்தது.
19.5 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 70 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு, 180 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்த அணியாக உலகச் சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 40/5 என்ற நிலையில் இருந்து 174 ரன்களைத் துரத்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


