Last Updated:
தோகாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலடி தந்திருக்கிறார்.
பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் முட்டாள்தனமானவை” என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லாதது, உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்டவைகளை கண்டித்து பிரான்சில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளோ அல்லது பள்ளிகளோ காரணமல்ல என்றும் முழுக்க முழுக்க குடியேற்றக் கொள்கையினால் ஏற்பட்ட பிரச்சனைதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
இம்மானுவேல் மேக்ரான் தனது நாட்டின் எல்லைகளைத் திறந்தே வைத்திருந்ததே தற்போதைய குழப்பங்களுக்குக் காரணம் என்றும் எல்லைகளை மூடும்படி முன்பே அவரிடம் எச்சரித்திருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோகாவில் செய்தியாளர்களிடம் பேசிய இமானுவேல் மேக்ரான், டிரம்புக்கு பதிலடி தந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கள் சொந்த நாட்டின் தேர்தல் அரசியல் லாபத்திற்காகப் பிரான்சின் பிரச்சினைகளைப் பயன்படுத்துவதாகவும், பிரான்ஸின் செலவில் அவர்கள் பரப்புரை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


