“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தின் ஊடாகப் பச்சை குத்திக்கொள்வதற்கும் தலைமுடியை வளர்த்துக்கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று திரிபுபடுத்தப்பட்ட முறையில் போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. இச்சட்டமூலத்தில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை; பாதாளக்குழுக்களை அடையாளப்படுத்தும் வகையிலான பச்சை குத்துதல் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளது” என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தால் இந்நாடு எவ்வாறான விளைவுகளை எதிர்கொண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பாதாளக்குழுக்களுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் திரிபுபடுத்தப்பட்ட முறையில் செய்திகள் பரப்பப்படுகின்றன; ஒருசில சட்டத்தரணிகளும் போலியான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார்கள்.
பச்சை குத்திக்கொள்ளல் மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்தல் ஆகியவற்றுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகப் போலியான செய்திகள் வெளியாகியுள்ளன. பச்சை குத்திக்கொள்வதும் தலைமுடி வளர்ப்பதும் அடிப்படை உரிமையாகும்; அந்த உரிமைகளுக்கு எதிராக எவ்வித ஏற்பாடுகளும் இச்சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை.
பாதாளக்குழுக்களின் உறுப்பினர் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பச்சை குத்திக்கொள்ளும் அம்சம் காணப்படுகிறது. வெளிநாடுகளிலும் இவ்வாறான தன்மை காணப்படுகிறது. பாதாளக்குழுக்களை அடையாளப்படுத்தும் வகையிலான பச்சை குத்துதல் தொடர்பில்தான் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாதாரண முறையில் பச்சை குத்துவது பற்றி இச்சட்டமூலத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எவரும் உயர்நீதிமன்றத்தில் இச்சட்டமூலத்தைச் சவாலுக்குட்படுத்தலாம். பாதாளக்குழுக்களும் அவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய அரசியல்வாதிகளும்தான் இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்; பொதுமக்கள் எவரும் இச்சட்டமூலத்தை எதிர்க்கப்போவதில்லை. பாதாளக்குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்” என்றார்.

