Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தீபாவளி வரை எந்தப் போராட்டமும் நடத்தாது என அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (14ஆம் தேதி) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இன்றைய டெல்லி தசரா விழாவில், ராவணனின் உருவ பொம்மையுடன் சேர்த்து 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்கப்பட இருக்கிறது. இதற்கு கருத்து தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, இலவசமாக எங்களை பிரபலபடுத்துவதற்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்தப் போராட்டமும் இல்லை எனவும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடுங்கள் எனவும் அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.


