Last Updated:
கேஎல் ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற மற்ற விக்கெட் கீப்பர்-பேட்டர்களின் தொடர்ச்சியான மற்றும் நிலையான ஆட்டம் பந்தின் இடத்திற்குப் போட்டியாக மாறியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தின் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பயணம் தற்போது கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அசைக்க முடியாத முதன்மை வீரராக ரிஷப் பந்த் தொடர்ந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இவருக்கான வாய்ப்புகள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளன.
எதிர்வரும் உலகக் கோப்பை தொடர்களைக் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் மாற்று வீரர்களை முன்னிறுத்தி வரும் சூழலில், அவரது ஒருநாள், டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு அவரது நிலையற்ற ஆட்டமும், சில இக்கட்டான கட்டங்களில் அவர் வெளிப்படுத்தும் தேவையற்ற ரிஸ்க் ஷாட்களும்தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆக்ரோஷமான மற்றும் அதிரடியான ஆட்டம் இந்தியாவுக்குப் பல வரலாற்று வெற்றிகளைத் தேடித்தந்துள்ளது.
ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிதானமும் ஆக்ரோஷமும் கலந்த ஆட்டம் தேவைப்படும் நிலையில், அவர் களத்தில் நிலைத்து நின்று விளையாடத் தவறுவது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற மற்ற விக்கெட் கீப்பர்-பேட்டர்களின் தொடர்ச்சியான மற்றும் நிலையான ஆட்டம் பந்தின் இடத்திற்குப் போட்டியாக மாறியுள்ளது.
எனினும், பந்த் தனது இயல்பான அதிரடி ஆட்ட பாணியை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். பேசிய ரவி சாஸ்திரி, “நான் ரிஷப் பந்திடம் எப்போதுமே ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன்; அது ‘புத்திசாலித்தனமாக விளையாடுங்கள்’ என்பதுதான்.
அவரிடம் அபாரமான திறமை உள்ளது, எனவே அவர் தனது இயல்பான ஆட்ட பாணியை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, ஆடுகளத்தின் சூழலையும் போட்டியின் நிலையையும் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்” என்று ரிஷப் பந்த்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


