
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதில் பாரிய நடைமுறைத் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த ஆவணம் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு முறையான அனுமதி பெறப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சின் அனுமதியைப் பெறாமல் தனது கையெழுத்தை மாத்திரம் பயன்படுத்தி குறித்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கை வருமாறு:
“கலகொட அத்தே ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைப்பது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போது, அந்தத் தேரரை விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு ஏற்படக் காரணமாக அமைந்த விடயங்களில் ஜனாதிபதி செயலகத்தினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களில் தொழில்நுட்பத் தவறு ஒன்று ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்மானம் சரியானதுடன், அந்தத் தீர்மானத்திற்கு நான் முழுமையாகக் மதிப்பளிக்கின்றேன்.
இந்தச் சூழலில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் இலக்கங்கள் பின்வருமாறு:
- ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் – 87417/10 இலக்க வழக்குப் பிரகாரம், நீதிமன்றத்திற்குத் தடை செய்தல், அரசியலமைப்பின் 105ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்தல்.
- ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் – 40042 இலக்க வழக்கு.
மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு முறையான அனுமதி பெறப்பட்டு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய சட்டப் பிரிவு மற்றும் மேலதிக சிரேஷ்ட செயலாளரினால் எனக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த அந்த மனுக்கள் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அதற்கமைய, குறித்த அமைச்சுக்களின் அனுமதியின்றி எனது கையெழுத்து மாத்திரம் பெறப்பட்டுள்ளது. இது எனது அறியாமையால் இடம்பெற்ற செயலாகும்.
மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் ஊடாக சந்தியாக எக்னெலிகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று ஊடாகவே இந்தத் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
நான் ஜனாதிபதி பதவியை வகித்த காலத்தில் எனது சட்டப் பிரிவு மற்றும் மேலதிக சிரேஷ்ட செயலாளரினால் இடம்பெற்றுள்ள தவறு காரணமாக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஒருமுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் எனது அதிகாரிகளால் எதேச்சையாகச் செய்யப்பட்டடிருப்பினும், கௌரவ மகா சங்கத்தினருக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தத் தகவலை நான் இணையத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியொன்றினை ஆய்வு செய்த பின்னரே உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாட்டின் கௌரவ மகா சங்கத்தினரும், ஊடகவியலாளர்களும் மற்றும் பலரும் என்னிடம் இந்த வழக்கின் தொழில்நுட்பத் தவறு எங்குள்ளது எனத் தொடர்ந்து வினவி வந்தமையால், இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

