Last Updated:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூரில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்முடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கிழக்கு தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகள் மற்றும் நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இளஞ்சிறார்கள், சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் கேடட் ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் தங்களது குத்துச்சண்டைத் திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் போட்டியிட்டனர்.
இதனுடன், குத்துச்சண்டைப் போட்டிகளை முறையாக நடத்துவதற்கான நடுவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும், போட்டி அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாமும் நடைபெற்றன. போட்டிகளின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. குத்துச்சண்டை விளையாட்டு மூலம் மாணவர்கள் உடல் உறுதி பெறுவதையும், வாழ்க்கையில் எதையும் முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் கிடைப்பதால் அதற்கான தகுதியும் திறமையும் இதன் மூலம் மாணவர்கள் பெறுவார்கள் என தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

