சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில், தனது சொத்துகளை விற்று 1,900 கிலோமீற்றர் பயணம் செய்த 49 வயது நபர், இறுதியில் ஏமாற்றமடைந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மரன்ஹாவோ மாநிலத்தைச் சேர்ந்த எடிமார் மார்ட்டின்ஸ் என்ற நபர், கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் அறிமுகமான ஜெசிகா ஒலிவேரா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த ஜெசிகா, கிராம வாழ்க்கை மற்றும் பண்ணை வீட்டில் வசிப்பது தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்து வந்துள்ளார். இதனால், அவரைத் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என மார்ட்டின்ஸ் நம்பியுள்ளார்.
இதற்காகத் தனது சொத்துகளை விற்ற அவர், பேருந்துகள் மூலம் சுமார் 1,900 கிலோமீற்றர் பயணித்து, ஒக்டோபர் 11ஆம் திகதி ஜெசிகா வசிப்பதாகக் கூறப்பட்ட பெலோ ஹொரிசோன்டே நகரைச் சென்றடைந்தார்.
எனினும், அங்கு ஜெசிகாவைத் தேடியபோது, அவர் உண்மையான பெண் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மார்ட்டின்ஸ், தன்னிடம் இருந்த பணத்தையும் இழந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துள்ளார்.
பின்னர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர்களின் உதவியுடன் அவருக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


