Last Updated:
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை இரட்டிப்பாகியுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சாவூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1,000 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாம் செய்யும் தொழிலே தெய்வம், கல்வியே அறிவையும் வாழ்வில் உயர்வையும் அளிக்கும் என்ற உயரிய நோக்கில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைகளின்போது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பூஜை செய்வதற்காகப் பூக்கள் அதிக அளவில் வாங்கப்படுவது வழக்கம்.
இதன் காரணமாக, தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஓசூர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், பண்டிகை தேவைக்காக பூக்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், காக்கரட்டான் மற்றும் சந்தன முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.1,000-க்கும், முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அரளிப்பூ கிலோ ரூ.600-க்கும், சம்பங்கிப்பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
