
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரை அகற்ற 500 உழவு இயந்திரங்களை மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளது.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதுடன், தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு 500 உழவு இயந்திரங்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெய்து வரும் பலத்த மழையினால், ராயபுரம் சூரிய நாராயண மூர்த்தி வீதியில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இதனால் வீதியைப் பயன்படுத்தும் பாதசாரிகளும் பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் லோட்டஸ் ராமசாமி வீதி, கொடிமர வீதி உள்ளிட்ட பல உள்வீதிகளிலும் நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று திருவொற்றியூர், பெரியார் நகர் மற்றும் காசிமேடு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளமையால் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் வாகனங்கள் வெள்ளநீரின் ஊடாகவே மிக மெதுவாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் துரிதமாக நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்காக விசேட நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 500 உழவு இயந்திரங்களை சென்னை மாநகராட்சி தயார் நிலையில் களமிறக்கியுள்ளது.
இருப்பினும் சில முக்கிய பகுதிகளில் வெள்ளநீர் முழுமையாக வடிந்தபாடில்லை என சுட்டிக்காட்டும் மக்கள், மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக களமிறங்கி தேங்கியுள்ள நீரை அகற்ற விரைவான மாற்றுப் பொறியியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

