
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11 அன்று கிரீஸில் நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 21 அன்று சென்னையில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம், எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.
இத்திருமண நிகழ்வில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி சென்னை ஈசிஆர் பகுதியில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத், நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் ஆவார். காவ்யா மாறனுடனான இவரது காதலுக்கு இரு குடும்பத்தாரும் முழுச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இந்தத் திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் மற்றும் வணிகப் பின்புலம் கொண்ட கலாநிதி மாறன் குடும்பத்தினர், திருமண வரவேற்புக்காகப் பல்வேறு முக்கியத் தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு ஏற்கெனவே அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாகக் கேரள முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலதிபர்கள், தென்னிந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்கள் பெருமளவில் பங்கேற்கவுள்ளதால், இந்த வரவேற்பு நிகழ்வு மிக ஆடம்பரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் மற்றும் பிரத்யேக விருந்து உபசரிப்பு உள்ளிட்ட பல விரிவான ஏற்பாடுகளைக் கலாநிதி மாறன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

