இந்தியாவில் தனது தொலைத்தொடர்பு சேவைகளுக்காக உருவாக்கிய தொழில்நுட்பங்களை வெளிநாடுகளிலும் பயன்படுத்தி வருமானம் ஈட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஐபிஓ (IPO) வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் ஜியோவின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஐபிஓ தொடர்பான ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் (RHP – பங்கு வெளியீட்டுத் தகவல் அறிக்கை) ஆவணத்தில் ஜியோ தனது சொந்த தொழில்நுட்பங்களை வெளிநாட்டுச் சந்தைகளில் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது குறித்துத் தெரிவித்துள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாகச் சேவைகளை வழங்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, பழைய தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய நாடுகள், 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் நாடுகள், அதிவேக பிராட்பேண்ட் இணையச் சேவைகளை விரிவுபடுத்த விரும்பும் நாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. மேலும், “இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நெட்வொர்க்குகளை வெற்றிகரமாக உருவாக்கி இயக்கிக் காட்டியுள்ள அனுபவம், உலகளவில் விரிவாக்கம் செய்ய எங்களுக்கு உதவும்” என்று ஜியோ தனது RHP ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனது தொலைத்தொடர்பு சேவைகளை நடத்துவதற்காக ஜியோ பல்வேறு தொழில்நுட்பங்களைத் தானாகவே உருவாக்கியுள்ளது. இவற்றை மற்ற நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் வழங்குவதே அதன் திட்டமாகும். இதுகுறித்து ஜியோ தனது ஐபிஓ ஆவணத்தில், “கிளவுட் அடிப்படையிலான ரேடியோ அணுகல் தொழில்நுட்பம் (RAN), 5G கோர் நெட்வொர்க், OSS/BSS மென்பொருள் தளங்கள், UBR அடிப்படையிலான வயர்லெஸ் பிராட்பேண்ட் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நெட்வொர்க் தானியங்கி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் சேவைத் தளங்கள் ஆகியவற்றுக்கு உலகளவில் பயன்படும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்த, அங்குள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பது, அவற்றின் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கி, அதைச் சிறப்பாக இயக்கிய அனுபவம் தங்களின் சர்வதேச வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜியோ நம்புகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாடுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதன் மூலம் ஜியோ ஏற்கெனவே கணிசமான வருமானம் ஈட்டி வருவதாக இந்த ஆவணம் கூறவில்லை. இது எதிர்காலத்தில் வருமானத்தை அதிகரிக்க உதவக்கூடிய ஒரு திட்டமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, தனது சேவைகளுக்குத் தேவையான பல தொழில்நுட்பங்களை வெளி நிறுவனங்களிடம் இருந்து முழுமையாக வாங்காமல், தானாகவே உருவாக்கியிருப்பதுதான் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், தனது சேவைகளின் முக்கிய அம்சங்களைத் தானே கட்டுப்படுத்த முடிகிறது. மேலும், புதிய வசதிகளை விரைவாக அறிமுகப்படுத்தவும், வெளி நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முடியும். இந்தியாவில் உருவாக்கிய தொழில்நுட்பங்களை வெளிநாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கினால், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதுடன் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும் என்பது ஜியோவின் எதிர்பார்ப்பு.
ஜியோவின் சர்வதேச விரிவாக்கத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவும் (AI) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக, JioBrain என்ற தனது சொந்த AI தொழில்நுட்பத்தை ஜியோ உருவாக்கியுள்ளது. இதற்காக, JioBrain என்ற தனது சொந்த AI தொழில்நுட்பத்தை ஜியோ உருவாக்கி வருவதாகவும் தனது தொலைத்தொடர்பு வலையமைப்பின் பல்வேறு செயல்பாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது.
RHP ஆவணத்தின்படி, ஜியோபிரைன் தொழில்நுட்பத்தின் மூலம், இணைய வலையமைப்பில் எவ்வளவு திறன் தேவை என்பதைக் கணித்து, அதற்கேற்ப வளங்களை ஒதுக்க முடியும். நெட்வொர்க்கில் கோளாறுகள் ஏற்படுவதற்கு முன்பே அவற்றைக் கணிக்க முடியும். ஏற்படும் கோளாறுகளை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்ய உதவ முடியும். இணையச் சேவையின் செயல்திறனை உடனுக்குடன் மேம்படுத்த முடியும்.
எளிமையாகச் சொன்னால், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணைய வலையமைப்பை மனிதர்கள் தொடர்ந்து கண்காணித்து நிர்வகிக்க வேண்டிய தேவையைக் குறைத்து, பல பணிகளை AI தொழில்நுட்பம் தானாகவே மேற்கொள்ள உதவுவதே இதன் நோக்கம். இந்த AI தொழில்நுட்பம், தானியங்கி நெட்வொர்க் மேலாண்மை மற்றும் AI மூலம் இயங்கும் வாடிக்கையாளர் சேவைகள் ஆகியவற்றை மற்ற நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
2026 ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, ஜியோவுக்கு 53.33 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் ஐபிஓ ஆவணம் தெரிவிக்கிறது. இவ்வளவு பெரிய வாடிக்கையாளர் தளத்தின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மற்றும் செயல்பாட்டு அனுபவங்களைப் பயன்படுத்தி தனது AI தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. ஆனால், JioBrain தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையோ, இந்தத் தொழில்நுட்பம் தற்போது எவ்வளவு வருமானத்தை ஈட்டுகிறது என்பதையோ நிறுவனம் தனியாகக் குறிப்பிடவில்லை. எனவே, இந்தத் திட்டத்தின் உண்மையான வணிக வாய்ப்பு, மற்ற நிறுவனங்கள் ஜியோவின் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முன்வருகின்றனவா, அதற்காக எவ்வளவு கட்டணம் செலுத்துகின்றன என்பதில்தான் இருக்கிறது.
வெளிநாடுகளில் ஜியோ விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள மற்றொரு முக்கியத் துறை, நிலையான வயர்லெஸ் இணையச் சேவை (Fixed Wireless Access – FWA). பொதுவாக, வீடுகளுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்க ஒவ்வொரு பகுதிக்கும் ஃபைபர் கேபிள்களை அமைக்க வேண்டியிருக்கும். ஆனால் FWA தொழில்நுட்பத்தின் மூலம் வயர்லெஸ் இணைப்பைப் பயன்படுத்தி வீடுகளுக்கு பிராட்பேண்ட் சேவையை வழங்க முடியும். இதனால், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக ஃபைபர் கேபிள் கொண்டு செல்வது கடினமாக இருக்கும் பகுதிகளிலும் இணையச் சேவையை விரிவுபடுத்த முடியும்.
ஜியோ தனது FWA தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் ஃபைபர் இணைப்புக்கு நிகரான பிராட்பேண்ட் அனுபவத்தை வழங்க முடிவதாகவும், அதிகபட்சமாக 1 Gbps வேகத்தை ஆதரிக்கும் திறன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனுடன், தனது 5G தொழில்நுட்பக் கட்டமைப்பையும் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஜியோ ஆராய்கிறது. இதில் 4G மற்றும் 5G சேவைகளை ஒருங்கிணைக்கும் கோர் நெட்வொர்க், 5G சாதனங்கள், OSS/BSS எனப்படும் நெட்வொர்க் மற்றும் வணிகச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் மென்பொருள் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
வெளிநாடுகளில் 5G சேவைகளைத் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட தனது தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவது ஜியோ நிறுவனத்தின் எதிர்பார்ப்பு. எனினும், எந்தெந்த நாடுகளில் முதலில் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது குறித்த உறுதியான பட்டியலை இந்த ஆவணத்தின் சம்பந்தப்பட்ட பகுதி வெளியிடவில்லை.
இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படும் தொழில்நுட்பம் வெளிநாடுகளிலும் அதே அளவுக்கு வெற்றி பெறும் என்று உறுதியாகக் கூற முடியாது. வெளிநாடுகளில் தனது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதை ஜியோவும் ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை, அரசு அனுமதிகள். ஒவ்வொரு நாட்டிலும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்கான விதிமுறைகள் வேறுபடும். அதற்கேற்ப அனுமதிகளையும் சான்றிதழ்களையும் பெற வேண்டும்.
அதேபோல், உள்ளூர் சட்டங்கள் தொலைத்தொடர்பு, இணையம் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும், தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான செலவுகள், உள்ளூர் போட்டியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும், வெளிநாடுகளில் வருமானம் ஈட்டும்போது நாணய மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் நிதி முடிவுகளைப் பாதிக்கலாம். தனது தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருட்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும், இந்தியாவுக்கு வெளியே தொலைத்தொடர்பு வணிகத்தை நடத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவம் இல்லை என்றும், இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்ற நாடுகளிலும் அதே அளவிலான வணிக வெற்றியைப் பெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் ஜியோ தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடத் தயாராகி வரும் நிலையில், அதன் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளில் இந்த சர்வதேசத் தொழில்நுட்ப வணிகமும் ஒன்றாக இருக்கிறது. இதுவரை ஜியோவின் முக்கிய வணிகம் இந்தியாவில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதாகும். தற்போது அந்தச் சேவைகளுக்காக உருவாக்கிய தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை ஆராய்கிறது.
ஆனால், இந்தத் தொழில்நுட்ப வணிகத்தின் வருமானம் மற்றும் வளர்ச்சியைக் குறிப்பாக அளவிடும் தனிப்பட்ட செயல்திறன் குறியீடுகள் தற்போது போதுமான அளவில் இல்லை என்று ஐபிஓ ஆவணம் தெரிவிக்கிறது. வணிகம் வளரும்போது புதிய அளவீடுகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை வைத்து மட்டும் ஜியோவின் எதிர்கால வருமானம் எவ்வளவு அதிகரிக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது.
ஜியோ இதுவரை இந்தியாவில் தனது தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கிய 5G, AI, வயர்லெஸ் பிராட்பேண்ட் மற்றும் நெட்வொர்க் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை, இனி மற்ற நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்க விரும்புகிறது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் வருமானம் ஈட்ட முடியும் என்பது அதன் எதிர்பார்ப்பு.
ஆனால், இது இன்னும் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டம்தான். வெளிநாடுகளில் எத்தனை நிறுவனங்கள் ஜியோவின் தொழில்நுட்பங்களை வாங்குகின்றன, அதன்மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, அந்த வருமானம் நிறுவனத்தின் மொத்த லாபத்தில் எந்த அளவுக்கு பங்களிக்கிறது என்பதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, வரவிருக்கும் ஐபிஓ-விற்கு, இந்த சர்வதேச தொழில்நுட்ப உத்தி என்பது உடனடி வருவாய் ஆதாரம் என்பதை விட, நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் ஒரு சாத்தியமான வழியாகவே பார்க்கப்படுகிறது.

