இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் சற்று தேக்க நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி ஒரு வாரத்துக்கும் மேலான நிலையில், ஜெய்சங்கரின் இந்த நேர்மறையான கருத்து வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவிக்கியில்,
நாங்கள் சில முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது பகிரங்கமாக வெளியிடுவது சரியாக இருக்காது.
இந்தியாவின் வர்த்தக அமைச்சரும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியும் மற்றும் இருநாட்டு அதிகாரிகளும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லத் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளன.
அமெரிக்கா போன்ற பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது கவனிக்க வேண்டிய ஒன்று அந்த நாட்டுக்கும் நமக்கும் இடையிலான ஒப்பந்தம்; மற்றொன்று போட்டி பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நிலை என்ன என்பதுதான்.
போட்டியிடும் அனைத்து நாடுகளுமே இன்னும் ஒப்பந்தத்தை இறுதி செய்யாததால், அந்தப் பகுதி முழுமையாகத் தெளிவடையவில்லை. ஆனால், இருநாட்டு வர்த்தக அமைச்சர்களும் இதனைச் சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனது கணிப்புப்படி, இந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை விரைவில் ஒரு சுமுகமான முடிவை எட்டும் என்று தெரிவித்தார். (a)

