Last Updated:
மொபைல் மற்றும் ஹோம் பிராட்பேண்ட் சந்தைகளில் ஜியோ நிறுவனம் அசைக்க முடியாத தலைமையாக உருவெடுத்துள்ளது
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பிரபல தொழிலதிபரும் கோடக் மகிந்திரா வங்கியின் இயக்குநருமான உதய் கோடக் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜியோவின் இந்த மிகப்பெரிய பங்குச்சந்தை அறிமுகம் என்பது பல ஆண்டுகால விடாமுயற்சியைக் கொண்டாடும் ஒரு மைல்கல் தருணம் என்றும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தரவு வளம் நிறைந்த நாடாக மாறியுள்ளதை இது பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட உதய் கோடக், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடிக்கும் குறைவான 4G வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த இந்தியா, தற்போது சுமார் 100 கோடி 4G மற்றும் 5G வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது வியப்புக்குரியது என்றார். இந்த நாட்டின் டிஜிட்டல் புரட்சியில் ஜியோ நிறுவனம் மிக முக்கிய மற்றும் மையப்பங்கு வகித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
மொபைல் மற்றும் ஹோம் பிராட்பேண்ட் சந்தைகளில் ஜியோ நிறுவனம் அசைக்க முடியாத தலைமையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகிலேயே சொந்தமாக முழுமையான டிஜிட்டல் இணைப்பு ஸ்டேக் (Digital connectivity stack) கொண்டுள்ள ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், முகேஷ் அம்பானியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த தலைமுறைத் தலைவர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் டிஜிட்டல் மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் புதிய சகாப்தத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் பொதுச் சந்தைப் பயணத்துடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட உதய் கோடக், தனக்கு 18 வயதாக இருந்தபோது ரிலையன்ஸின் ஐபிஓ விளம்பரத்துக்காக மும்பை மரைன் டிரைவ் பகுதி வண்ண விளங்களால் ஜொலித்ததை நினைவு கூர்ந்தார்.
அந்தத் தருணம் தனது நிதிச் சேவைக் கூட்டுத் துறை வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி சந்தைகள் மீது காட்டிய அக்கறையும் முதலீட்டாளர்களுக்கான மதிப்பை உருவாக்கிய விதமும் போற்றுதலுக்குரியது என்றும் அவர் கூறினார்.
ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்து வரும் இந்த மிகப்பெரிய ஐபிஓ வெளியீடு இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம் என்று அவர் புகழாரம் சூட்டினார்.


