International
oi-Nantha Kumar R
டெல்அவிவ்: ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் பயணித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் துணை விமானி தாக்கிய பிறகு அவரை சக பயணிகள் பிடித்து கட்டிவைத்தனர். இந்த சமயத்தில் விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் ஓமன் துணை விமானியை விடுவிக்க முயன்றதோடு, உயிருக்கு போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வாயில் மர்ம மாத்திரையை திணிக்க முயன்றதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக விமானத்தில் பயணித்த பயணி அசாப் ரஜுவன் இஸ்ரேல் நாட்டின் ‘ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: ”ஃப்ளை துபாய் விமானத்தில் ஓமன் துணை விமானிக்கு சில விமான பணியாளர்கள் உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானியை பிடித்து கட்டிவைத்தபோது விமான பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை வீடியோ எடுக்கவும் விடவில்லை.

ஒருவர் என்னை பார்த்து காவல் அதிகாரியா? என்று கேள்விகேடு ஆடைகளை பிடித்து இழுக்க முயன்றார். இதனால் விமான பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி காயமடைந்திருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வாயில் மாத்திரை ஒன்றையும் திணிக்க முயன்றனர். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர அந்த விமானத்தில் பணியில் இருந்த விமான பணியாளர்கள் அனைத்தும் ஆண்கள் தான். பெண்கள் யாரும் இல்லை. இதுவும் சந்தேகத்தை கிளப்புகிறது. சதித்திட்டம் கைகூடாவிட்டால் விமான பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த விமான கடத்தல் முயற்சி தொடர்பாக ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியுடன் வசித்ததாக கூறப்படும் மாலத்தீவை சேர்ந்த ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனத்தை சேர்ந்த 2 விமானிகளை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான தகவல் நேற்று கசிந்த நிலையில் இஸ்ரேல் நாட்டை பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால் ‘ஃப்ளைதுபாய்’ விமான விவகாரத்தில் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியின் பின்னணியில் இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

