Last Updated:
வீரர்களுடன் நட்பு ரீதியான உறவுகள் இருந்தாலும், தேசிய அணியின் தேர்வு என்று வரும்போது வரம்புகளை மீற முடியாது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் மற்றும் ஜாகீர் கான் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தூர்தர்ஷனின் ‘தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், தனிப்பட்ட நட்புறவுகளைக் காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நலனுக்கே தங்களது தேர்வுக்குழு முதலிடம் அளித்ததாகத் தெரிவித்தார்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்த கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தேர்வுக்கமிட்டியின் ஐந்து உறுப்பினர்களின் கூட்டு முடிவாகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் ஒருவரால் மட்டும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
வீரர்களுடன் நட்பு ரீதியான உறவுகள் இருந்தாலும், தேசிய அணியின் தேர்வு என்று வரும்போது வரம்புகளை மீற முடியாது என்றும், நாட்டின் நலனே எல்லாவற்றையும் விட மேலானது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
இந்த ஜாம்பவான்களான சச்சின், கம்பீர், யுவராஜ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் ஏன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் அல்லது ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதற்கான காரணங்களை தாங்களே நன்கு அறிவார்கள் என்றும் சந்தீப் பாட்டீல் சுட்டிக்காட்டினார்.
மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை அமைப்பதே அந்தத் தருணத்தில் தங்களது பிரதான கடமையாக இருந்தது என்பதை அவர் இந்த பேட்டியின் மூலம் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.


