
போலந்தில் பாடசாலைகளில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து மாணவர் பாதுகாப்பிற்காக 20,000 பொலிஸார் குவிக்கப்பட்டு நாடு தழுவிய தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போலந்தில் அண்மையில் பாடசாலைகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட மூன்று கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பாரிய பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறைப் போக்கை உறுதியாக எதிர்கொள்ளப்போவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த விசேட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கத்திக்குத்து தாக்குதல்கள் இணையவழி சவால்கள் அல்லது ஏதேனும் திட்டமிட்ட குழுக்களுடன் தொடர்புடையவை என்ற வதந்திகளை பாதுகாப்புத் தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டொனால்ட் டஸ்க், இணையத்தின் சில தளங்களில் வன்முறைகள் பெருமைப்படுத்தப்படுவது இளைஞர்கள் மத்தியில் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
போலந்திலும் உலக அளவிலும் வன்முறை மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது எனவும், இது கவலைக்கிடமான ஒரு போக்கு எனவும் சுட்டிக்காட்டிய அவர், நாஜி கொள்கைகளைப் பரப்புரை செய்யும் உள்ளடக்கம், பலத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போக்குகள் மற்றும் வன்முறைக் கணினி விளையாட்டுகள் என்பன இதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலைகளின் பாதுகாப்பிற்காக திங்கட்கிழமை முதல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் மார்சின் கியர்வின்கி ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.
போலந்து நாட்டின் குழந்தைகள் மீதான எந்தவொரு தாக்குதலையோ அல்லது பொது வாழ்வு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதையோ ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என அவர் அந்நாட்டு அரச செய்திச் சேவையான டிவிபி இன்போவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 80,000 கல்வி நிறுவனங்கள் பொலிஸாரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

