நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ‘குவோ வாரண்டோ’ மனு திங்கட்கிழமை (அக்டோபர் 12) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாம் முறையாக அமைக்கப்படாததால் வாதங்களைத் தொடர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணை
இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கெளசல்யா நரேந்திரன், தனது கட்சிக்காரர் புதிய சட்டத்தரணிகளை நியமிக்க உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதன்படி, நீதிபதிகள் மாயாதுன்னே கோரியா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், வழக்கு விசாரணையை டிசெம்பர் 16 ஆம் திகதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2024 பொதுத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது அர்ச்சுனா ஒரு அரசாங்க மருத்துவ அதிகாரியாகவே இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றுவதற்கான அவரது தகுதியை எதிர்த்து ஒஷாலா ஹெரத் என்பவரால் குவோ வாரண்டோ மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், தான் சம்பளமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்ததால் தகுதியிழப்பு விதியின் கீழ் அரச அதிகாரியாகக் கருதப்பட முடியாது என அர்ச்சுனாவின் தரப்பு முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.
தனது தகுதிக்கு எதிராகத் தொடரும் சட்டரீதியான சவாலைக் குறிப்பிடும் வகையில், அர்ச்சுனா பலமுறை நாடாளுமன்றத்தில், தான் நீண்ட காலம் உறுப்பினராக நீடிக்க மாட்டேன் என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

