
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரை 2-0 என இழந்துள்ள இலங்கை அணி, இருதரப்பு டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறாவது தோல்வியைச் சந்தித்து பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இதன் மூலம் இருதரப்பு டி20 தொடர்களில் இலங்கை அணி சந்திக்கும் தொடர்ச்சியான தோல்விகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் மற்றும் கேரி கிர்ஸ்டன் தலைமையிலான புதிய பயிற்றுவிப்பாளர் குழுவின் கீழ் அணி மறுசீரமைக்கப்பட்ட போதிலும், களத்தில் வெற்றிகரமான பெறுபேறுகளை வெளிப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.
புதிய நிர்வாக மாற்றங்களுக்குப் பின்னரும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணி கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக டி20 சர்வதேச போட்டிகளில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இலங்கை, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாகத் தோல்வியடைந்தது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடரை இழந்துள்ளமை அணியின் சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முடிவுகளைத் தாண்டி, இந்தத் தொடர் தோல்விகள் ஏற்பட்ட விதம் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கை அணி விளையாடிய கடந்த ஆறு இருதரப்பு டி20 போட்டிகளிலும் எந்தவொரு போட்டியும் கடுமையான போட்டியாகவோ அல்லது கடைசி வரை போராடித் தோற்றதாகவோ அமையவில்லை.
துடுப்பாட்ட வரிசையின் சீரற்ற நிலை, களத்தடுப்பில் விடப்படும் தவறுகள், திட்டமிட்டபடி பந்துவீச்சை முன்னெடுக்கத் தவறியமை மற்றும் ஆடுகளச் சூழலுக்கு ஏற்ப அணியின் வியூகங்களை மாற்றியமைக்க இயலாமை போன்ற பலவீனங்களே இந்தத் தொடர் தோல்விகளுக்கு முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

