சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது அடையாளம் காணப்படாத ஏவுகணைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11) தாக்கியதில் தீ பரவியதாக, யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் நான்காவது முனையம் (Terminal 4) மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. இதே விமான நிலையத்தில் 24 மணித்தியாலங்களுக்கும் குறைவான இடைவெளியில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு அருகில் வந்த குரூஸ் ஏவுகணை ஒன்றைச் சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்துத் தாக்கி அழித்ததாகக் கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிக்கி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமீபத்திய தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் பொருளின் தோற்றம் மற்றும் சேதங்களின் அளவு தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல், பெப்ரவரி மாதம் ஈரான் போர் ஆரம்பித்ததிலிருந்து வளைகுடா அரபு நாடொன்றில் பதிவான மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. இதையடுத்து விமான நிலையச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், பல சர்வதேச விமான நிறுவனங்கள் தமது விமானப் பயணங்களை இரத்துச் செய்துள்ளன அல்லது மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பியுள்ளன.
சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சவூதி விமான நிலையங்களையும் வான்வெளியையும் பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் ஹூதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யேமனில் சவூதியின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் மோதல்கள் மேலும் தீவிரமடையும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். (a)

