ஜோகூர் மாநில ம.இ.கா.வின் நீண்டகாலக் கனவான சொந்தக் கட்டடத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு கோடி வெள்ளி செலவில் அமைக்கும் திட்டத்தை ரவீன் குமார் கிருஷ்ணசாமி அறிவித்தார். இக்கனவை நனவாக்க 10 லட்சம் வெள்ளி வழங்குவதாகக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்தார்இங்குள்ள பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் விடுதியில் நடைபெற்ற ஜோகூர் மாநில ம.இ.கா.வின் 80ஆவது மாநாட்டில் இவ்வறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கான செயல்திறன் இலக்குகளில் ஒன்றாக இக்கட்டடத் திட்டத்தை முன்வைத்த ரவீன் குமார், மாநில ம.இ.கா.வுக்குச் சொந்தக் கட்டடத்தை உருவாக்கும் கனவை நிறைவேற்ற நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார். அதன் தொடக்கமாகத் தமது சொந்தப் பங்களிப்பாக 20 ஆயிரம் வெள்ளி வழங்குவதாகவும் அறிவித்தார்.இத்திட்டத்தை வரவேற்ற விக்னேஸ்வரன், சிறந்த கனவு திட்டமாக மட்டும் நின்றுவிடாமல் நனவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தமது பங்களிப்பை அறிவித்தார்.
கட்சியின் வலிமைக்கு ஒற்றுமையே அடித்தளம் எனக் குறிப்பிட்ட அவர், கிளை உறுப்பினர்கள் ஒருமித்துச் செயல்பட்டு சமூக முன்னேற்றப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தல் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்று உறுதியளித்த அவர், முன்பு இழந்த நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்கக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். கட்சியின் பல்கலைக்கழகம் அனைத்துச் சமூகத்தினருக்கும் சேவையாற்றுவதோடு, மாணவர்களுக்குக் கல்வி உதவிகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.


இதனிடையே, தீபாவளி உதவிப் பொட்டலங்கள், கொண்டாட்டங்களுக்காக இவ்வாண்டு 35 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி பெசார் அறிவித்தார்.மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர் அனைவரும் ஜோகூர் மக்கள் குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்றும், இந்த ஒற்றுமையே மாநிலத்தின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பாகப் பேசிய அவர், 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தியச் சமூகத் தலைவர்களை நியமிக்கும் பரிந்துரை ஆய்வில் இருப்பதாகக் கூறினார். மாவட்ட அலுவலகங்களில் இந்தியச் சமூகத் தொடர்பு அதிகாரிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதோடு, உள்ளாட்சி மன்றங்களில் இந்தியப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.நில விவகாரங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
அண்மைய தேர்தலில் 48 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த தேர்தலில் குறைந்தது 52 தொகுதிகளை வெல்வதே இலக்கு என்று அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சியிடமிருந்து இரு தொகுதிகளை மீட்ட ம.இ.கா.வின் பங்களிப்பைப் பாராட்டி, வெற்றிபெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடைக்கு அழைத்தார்.அடுத்த வெற்றியை உறுதிசெய்யத் தலைவர்கள் தீவிரக் களப்பணி, குழுச் செயல்பாடு, பணிகளின் நுணுக்கமான கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆண்டு இறுதிக்குள் கிராமத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயல்திறன் இலக்குகள் வெளியிடப்படும் என்றும், பொறுப்பேற்றுள்ள ஒவ்வொருவரின் சேவையும் மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ம.இ.கா., தேசிய முன்னணித் தலைமையால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுவீச்சில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
கோகி கருணாநிதி



