செய்யாறு டூ வாசிங்டன்.. 23 வருடத்திற்குப் பின் பெற்றோருக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்த மைக்ரோசாப்ட் VP!
ஏஐ காலத்தில் எங்கு திரும்பினாலும் பணிநீக்கம் இருக்கும் வேளையில், செய்யாறு அரசுப் பள்ளியில் படித்து வாசிங்டனில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்சல் கோபைலட் மற்றும் ஏஜெண்டிக் ஏஐ பிரிவின் இன்ஜினியரிங் துணைத் தலைவராக இருந்த கேசவன் சண்முகம் 35 வருட அமெரிக்க வாழ்க்கையை விடுத்து தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து தனது Linkedin தளத்தில் வெளியிட்ட பதிவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 23 வருடம் பணியாற்றிவிட்டு இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன், இந்தியாவில் இருக்கும் வயதான என்னுடைய பெற்றோர்களுடன் நேரத்தைச் செலவிட முடிவு செய்து பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருக்கும் என்னுடைய சக ஊழியர்களை விட்டுச் செல்வதும், என்னுடைய பணியை விட்டுச் செல்வது என்பது கடினமான முடிவு தான், ஆனாலும் என்னுடைய குடும்பத்துடனும், நண்பர்கள் உடனும் இருக்கப்போகிறேன் என்பது சரியான Trade Off எனக் கேசவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கேசவன் சண்முகம் 1988 – 1992 காலகட்டத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சைன்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற கேசவன். சுமார் 35 வருடம் அமெரிக்காவில் பணியாற்றினார். இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமே 23 வருடம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக வெளிநாட்டில் பணியாற்றி வரும் பல மூத்த அதிகாரிகள், முக்கிய பதவிகளில் இருக்கும் தலைவர்கள் எனப் பல தங்களுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்காவில் 20-25 வருட வாழ்க்கையை மொத்தமாகத் தூக்கிப்போட்டுவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி வருகின்றனர்.
இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளது, பணிநீக்கம் காரணம் தாய்நாட்டிற்கு வருவது 1-10 வருடம் அனுபவம் கொண்ட ஊழியர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது, இதேநேரம் 10-20 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள் பலர் இந்தியாவில் ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் போதுமான சம்பளத்துடன், உயர் பதவியும் கிடைக்கும் காரணத்தால் இந்தியாவில் செட்டிலாக வேண்டும் என்ற திட்டத்துடன் அதிகளவில் தாய் நாட்டிற்கு வருகிறார்கள்.
அடுத்த முக்கிய பிரிவு 20+ ஆண்டுகள் அனுபவம், அமெரிக்காவிலேயே படித்து அங்கேயே கரியரைத் துவங்கி 20 -30 வருடம் பணியாற்றி பின்பு வீடு, கார் என முழுமையாக செட்டிலான வாழ்க்கையை மொத்தமாகத் தூக்கிப்போட்டுவிட்டு தாய் நாட்டிற்கு வருகிறார்கள்.
அப்படி வரும் 10ல் 9 பேர் இந்தியாவில் இருக்கும் வயதான தனது பெற்றோர்களை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் உடன் தான் வருகிறார்கள். இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் VP கேசவன் சண்முகமும் ஒருவராக உள்ளார்.

