Cricket
oi-Yogeshwaran Moorthi
இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமாக 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஷமார் ஜோசப் வீசிய 2வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் அபிஷேக் சர்மா – இஷான் கிஷன் கூட்டணி இணைந்தது. சஞ்சு சாம்சன் விக்கெட்டை இந்திய அணி இழந்தாலும், ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் அபிஷேக் சர்மா எடுத்து கொண்டார். ராஸ்டன் சேஸ் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் சர்மா 4, 6, 6 என்று விளாச, மறுபக்கம் இஷான் கிஷன் 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
தொடர்ந்து 5வது ஓவரில் 4, 4, 4, 6 என்று அபிஷேக் சர்மா ஒரு இடி இடித்தார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் அபிஷேக் சர்மா 6, 4, 4 என்று விளாசி 18 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் 14வது அரைசதம் இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதி வேகமாக அடிக்கப்பட்ட 5வது அரைசதமாகவும் இது அமைந்துள்ளது.
அதேபோல் இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா இன்னொரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற பிரம்மாண்ட வரலாற்றை படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைவசம் இருந்த இந்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்து தன்வசப்படுத்தியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 1,164 பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய சாதனையை, அபிஷேக் சர்மா 1,024 பந்துகளில் எட்டி சாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் ஆரோன் ஃபின்ச் 1,283 பந்துகளிலும், கிளென் மேக்ஸ்வெல் 1,304 பந்துகளிலும், ஹர்திக் பாண்டியா 1,390 பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதனால் அபிஷேக் சர்மா இன்னும் ஏராளமான சாதனைகளை தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

